இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார்.
இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். வவுனியாவில் உள்ள முகாமை அவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் குறை, நிறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
"எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்; இயன்றவரை கண்டிப்பாகச் செய்வோம்' என்று உள்ளூர் மக்களிடமும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களிடம் அவர் உறுதி கூறினார்.
கொழும்பிலிருந்து விமானம் மூலம் வன்னி ராணுவ தலைமையகத்துக்குச் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செட்டிகுளத்தில் உள்ள முகாமை அவர் பார்வையிட்டார்.
வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 பதுங்கு குழிகளை அவர் பார்த்தார். வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர். அப் பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார்.
பின்னர் வவுனியாவில் உள்ள அரசு பிரதிநிதியுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் மறுபடியும் குடியமர்த்துவது குறித்தும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் அரசுப் பிரதிநிதியிடம் அவர் ஆலோசித்தார்.
அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்துதரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர்.
பின்னர் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டார். கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த 7 குழுக்கள் பணியாற்றி வருகின்றன. கண்ணி வெடிகளை அப்புறப்படுத்திய பின்னரே தமிழர்களை மறுபடியும் குடியமர்த்த முடியும் என்று கூறி, கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தி வருகிறது இலங்கை அரசு.
நிருபமா கொழும்பு செல்வதற்கு முன், வடக்குப் பகுதியில் முல்லைத் தீவுக்கும் கிழக்குப் பகுதியில் திரிகோணமலைக்கும் புதன்கிழமை செல்கிறார்.
கொழும்பு திரும்பியவுடன் புதன்கிழமை மாலை தமிழ் எம்.பி.க்கள் மற்றும் தமிழர் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது.
ராஜபட்சவுடன் சந்திப்பு: வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸ சந்திக்கிறார்.
தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் மறு குடியமர்வுக்காக இந்தியா ஏற்கெனவே | 500 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. இதுதவிர தமிழக அரசு சேகரித்த 2.5 லட்சம் குடும்ப நிவாரண பாக்கெட்டுகளையும் இந்தியா வழங்கி உள்ளது. இதுதவிர கூடாரங்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட 2500 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்களும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்காக 55 பேருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.
சமீபத்தில் 4 லட்சம் சிமென்ட் மூட்டைகளையும் இந்தியா வழங்கியது. தமிழர்களின் சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்க இந்த சிமென்ட் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.
இதுதவிர, வட கிழக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா நிறைவேற்றி வருகிறது. ரயில் பாதை அமைப்பது, துறைமுகம், கலாசார மையங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றைக் கட்டும் பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான், மீண்டும் பிழைப்பேனா என்று நினைத்தேன். ஆனால் நான் மரணத்தை வென்றுவிட்டேன் என்றும் மெக்ஸிகோ நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது: உடல் நலம் பாதித்த போது நான் பிழைத்திடுவேனா, இல்லை இறந்திடுவேனா, மருத்துவர்கள் என்னை காப்பாற்றிவிடுவார்களா, இல்லை முடியாது என்று கையைவிரித்திடுவார்களா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால் உடல் மிகவும் மோசமடைந்த நிலையில் இருந்து மீண்டுவிட்டேன்.
உடல்நிலை தேறி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய நான் மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்ப கடுமையாகப் போராடினேன். உடல்நல பாதிப்பால் எனது கால்களும், கைகளும் செயலிழந்து காணப்பட்டன. இதனால் கால்களையும், கைகளையும் பழைய நிலைக்கு கொண்டுவர முயன்றேன்.
எழுந்து நிற்பதே கடினமாக இருந்தது. எனினும் வைராக்கியத்துடன் கஷ்டப்பட்டு எழுந்து நடந்தேன். பேனாவை எடுத்து எழுதி கைக்கு வேலை கொடுத்தேன். உள்ளத்தையும், உடலையும் மீண்டும் புத்துணர்வாக வைத்துக்கொண்டேன். இதனால் என்னால் ஓரளவுக்கு வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப முடிந்தது.
இழந்த உடல் எடையையும் மீட்டுள்ளேன். இப்போது 85 கிலோ எடை உள்ளேன். எனினும் உணவு, மருந்து எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் மருத்துவர் ஆலோசனையை தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறேன்.
எனது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து ஆலோசித்து, அவர்களிடம் சந்தேகத்தையும், கேள்விகளையும் எழுப்பி மருத்துவம் சம்பந்தமாக நான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். சரியாக சொல்வதென்றால் நான் பட்டம் பெறாத டாக்டராகிவிட்டேன் என்றார் பிடல் காஸ்ட்ரோ.
இந்த பேட்டியின் போது பிடல் காஸ்ட்ரோ உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். கேட்கும் கேள்விகளுக்கு நகைப்புடன் பதில் அளித்து எங்களை சிரிக்க வைத்துவிட்டார் என்று பிடல் காஸ்ட்ரோவிடம் பேட்டி கண்ட மெக்ஸிகோவின் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
கியூபாவை ஏறக்குறைய அரைநூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர் கம்யூனிஸ தலைவர் பிடல் காஸ்ட்ரோ. 2006-ன் மத்தியில் அவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவரது இரைப்பையில் பிரச்னை ஏற்பட்டது. அவர் மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டார்.
பிடல் காஸ்ட்ரோ உடல்நிலை பாதிக்கப்பட்டது அவர் மீது உயிரையே வைத்திருந்த கியூபா மக்களுக்கு பெரும் சோகமாக அமைந்தது. எனினும் அவர் மெதுவாக உடல்நலம் தேறினார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதிபர் பதவியில் தன்னால் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று பிடல் காஸ்ட்ரோ கருதினார்.
இதனால் அதிபர் பதவியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் 2008-ல் ஒப்படைத்துவிட்டு அரசின் சிறப்பான செயல்பாட்டு தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கி வருகிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன வீரர்கள் நடமாட்டம் குறித்து மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பின் பாஜக உறுப்பினர் ராம்தாஸ் அகர்வால் பேசியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான கில்கித்- பால்திஸ்தானில் 7 ஆயிரம் முதல் 11 ஆயிரம் சீன வீரர்கள் நிலைகொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலை குறித்து உளவுத் துறை அமைப்புகள் தெரிந்து கொள்ளாதது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். உளவுத் துறை செயலிழந்துவிட்டதா?
சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் கண்காட்சியில் இந்திய வரைபடத்தை சீன அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
1962-ல் நிகழ்ந்தது போன்றே மீண்டும் ஒரு முறை நிகழ வேண்டுமா? நாம் நமது கண்களை எப்போதுதான் திறக்கப் போகிறோம் என அவர் கேள்வி எழுப்பினார்.
உடனே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "வெட்கம், வெட்கம்' என ஆவேசத்துடன் கோஷம் எழுப்பினர்.
நக்ஸல் விவகாரம் குறித்து பாஜக உறுப்பினர் ஸ்ரீகோபால் வியாஸ் பேசியதாவது:
நக்ஸல் பாதிப்புப் பகுதிகளில் கண்ணிவெடிகளில் சிக்கி நமது வீரர்கள் இறக்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார்.
பிரபாத் ஜா (பாஜக): வெடிமருந்துகளுடன் சென்ற 164 வாகனங்கள் கடந்த 2 மாதங்களில் மாயமாகி உள்ளன. அவை என்ன ஆயின என்பது குறித்து தகவல் இல்லை. அந்த வெடிமருந்துகள் நக்ஸல்கள் கைகளுக்கு சென்றிருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது என்றார் ஜா.