இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஆலைகளுக்கு உறிஞ்சப்படும் தாமிரபரணி நீர்: வேளாண்மை பாதிப்பு


தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து பெருமளவில் தண்ணீர் எடுக்கப்படுவதால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கும் 20 எம்.ஜி.டி. திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமே தாமிரபரணி ஆறுதான். இம் மாவட்ட தாமிரபரணி பாசனத்தில் மருதூர் அணை, ஸ்ரீவைகுண்டம் அணை ஆகியவற்றைச் சேர்ந்த 4 கால்வாய்கள் மூலம் 46,107 ஏக்கர் நன்செய் நிலங்கள் சாகுபடியில் உள்ளன.

இந்த நன்செய் நிலங்களை நம்பித்தான் கிராமப்புற விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலங்களுக்கு பாபநாசம் அணையிலிருந்தும், மணிமுத்தாறு அணையிலிருந்தும் தண்ணீர் வழங்கப்படுகிறது. நீரைத் தேக்கிவைத்து விநியோகிக்க 53 பாசன குளங்கள் உள்ளன.

இந் நிலையில், தாமிரபரணி தண்ணீரை தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் மூலம் வழங்குவதற்கு 1970-ம் ஆண்டு 20 எம்.ஜி.டி. (நாளொன்றுக்கு 20 மில்லியன் காலன்) திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது ரூ. 4.70 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டம், 1975-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

20 மில்லியன் காலன் நீரை ஸ்ரீவைகுண்டம் அணை வடகாலில் இருந்து எடுத்து தூத்துக்குடி பகுதியில் உள்ள ஸ்பிக், டாக், கனநீர் ஆலை, அனல்மின் நிலையம், தாரங்கதாரா ரசாயன ஆலை, தூத்துக்குடி சிப்காட், ஸ்டெர்லைட் தொழிற்சாலை, பழையகாயல் ஜிர்கோனியம் தொழிற்சாலை ஆகிய 8 ஆலைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தால் 1975-ம் ஆண்டுக்குப் பின் இம் மாவட்டத்தில் 35 ஆண்டுகளாக கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முன்கார் சாகுபடியும் முறையாகக் கிடைக்கவில்லை. பிசான சாகுபடிக்கும்கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது என விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந் நிலையில், மேலும் 3 எம்.ஜி.டி. (தினமும் 3 மில்லியன் காலன்) நீரைக் கூட்டி 20 எம்.ஜி.டி. திட்டத்தை 23 எம்.ஜி.டி. திட்டமாக மாற்றி, ரூ. 28 கோடியில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியிலிருந்து 24 கி.மீ. தொலைவு வரை ராட்சத குழாய்கள் பதித்து, மூடிய குழாய் மூலம் தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டத்தை நிறைவேற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது பணிகள் முடியும் நிலையில் உள்ளன.

இந்தத் திட்டத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன விவசாயமே கேள்விக்குறியாகிவிடும். இப்பாசனத்தில் உள்ள 46,107 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கும் ஒருபோகத்துக்குக்கூட பாசனநீர் கிடைக்காமல் விவசாய நிலங்கள் தரிசாகும் நிலை ஏற்படும் என்கிறார் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்புப் பேரவை அமைப்பாளர் எஸ். நயினார் குலசேகரன்.

மேலும் அவர் கூறுகையில், இத் திட்டத்தால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் தாமிரபரணி ஆற்றிலும், பிரதான கால்வாய்களிலும் நீர்வரத்து குறைந்து நீரோட்டம் இல்லாமல் போகும். இதனால், கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்படும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும். நிலத்தடி நீர் பெரியளவில் பாதிக்கப்படும். விவசாயப் பகுதிகள் வறண்டு நெல், வாழை, வெற்றிலை சாகுபடியும் பாதிப்புக்குள்ளாகும். இதனால், கிராமப்புறப் பொருளாதாரம் சீர்குலையும்.

எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த 20 எம்.ஜி.டி. திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

இதே கருத்தை, பாமக மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் அ. வியனரசும் வலியுறுத்தினார். ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியிலிருந்து தண்ணீர் எடுப்பதால், கோடைக்காலங்களில் அணைப் பகுதி வறண்டுவிடும். இதனால், இப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படும்.

எனவே, தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் எடுக்கும்வகையில் மாற்றுத் திட்டங்கள் மூலம் பெற வேண்டும். தாமிரபரணி நீரை விவசாயத்துக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விவசாயத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் 20 எம்.ஜி.டி. திட்டத்தை அரசு முழுமையாகக் கைவிட வேண்டும். இல்லையேல், விவசாய அமைப்புகளுடன் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தத் தயங்க மாட்டோம் என்றார் அவர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment