இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாய பணிகளுக்கு கூலியாட்கள் கிடைக்காத அவலம்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளுக்கு கிராம பகுதியில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் செல்வதால், விவசாய பணிகளுக்கு கூலியாட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை மூலம் கீழ்பவானி, அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன், தடப்பள்ளி பாசன பகுதிகள், குண்டேரிப்பள்ளம், வரட்டுபள்ளம், ஒரத்துப்பாளையம் ஆகிய அணைகள் மற்றும் குளங்கள், குட்டைகள், சிறு அணைக்கட்டு மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யப்படுகிறது. பத்தாண்டாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களின் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. விதைகள், உரத்தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு, பருவமழை ஏமாற்றம், விவசாயத்துக்கு தேவைப்படும் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளின் உற்பத்தி குறைவு, விவசாய கூலியாட்கள் பற்றாக்குறை, இளைய தலைமுறையினரின் மாற்று தொழிலில் ஏற்பட்ட ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால், விவசாயம் மெல்ல மெல்ல நலிந்து வருகிறது. விவசாய தொழிலை காப்பாற்ற அரசு, மானிய விலையில் விதை மற்றும் உரம், விவசாய கூலி தொழிலாளர் பற்றாக்குறையை நீக்க நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக இடு பொருட்கள் அறிமுகம் ஆகியவற்றை செய்து வந்தாலும், கூலியாட்கள் பற்றாக்குறை பிரச்னை தொடர்கிறது. இந்நிலையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், விவசாய பணிகளை மேலும் பாதித்தது. வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண், பெண் பேதமில்லாமல் நாள் ஒன்றுக்கு முதலில் 80 ரூபாய் வழங்கப்பட்டது. இதனால் விவசாய பணிகளுக்கு சென்ற 90 சதவீதம் பேர் வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு சென்று விட்டனர்.


இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள போதிய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு முதல் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 100 ரூபாயாக கூலி உயர்த்தப்பட்டது. எட்டு மணி நேர வேலை என்பதால், விவசாய தொழிலில் பழுத்த அனுபவம் வாய்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊரக வேலைக்கு சென்று விட்டதால், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து ஏப்ரல் மாதம் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. போதிய விவசாய கூலியாட்கள் இல்லாததால் நடவு பணிகள் தாமதமாகதான் தொடங்கியது. அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியுள்ள நிலையில் நேற்று காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறையால், உணவு தானிய உற்பத்தி பணிகள் சிறப்பாக நடைபெறுமா என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.


உணவு தானிய உற்பத்தி செய்யப்படும் கால கட்டங்களில், கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இதன் மூலம் விவசாய கூலி தொழிலாளர், விவசாயத்தில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். மேலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் விவசாயத்தை சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அணைகளில் போதிய தண்ணீர் வசதி இருந்தும், விவசாய பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லாமல் உணவு தானிய உற்பத்தி வெகுவாக குறைந்து விடும் என்பதில் ஐயமில்லை.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment