இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வறண்ட பூமியில் பூத்துக் குலுங்கும் பட்டுரோஸ் : நல்ல பலன் தருவதாக விவசாயி மகிழ்ச்சி

வறண்ட பூமியில் பூத்துக் குலுங்கும் பட்டுரோஸ் விவசாயம் நல்ல பலன் தருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணர் பகுதி. இது வானம் பார்த்த பூமி. இந்த வறண்ட பூமியில் எத்தனை நாளைக்குத்தான் சோளம், துவரை, எள், கம்பு, கேப்பை போன்ற பயிர்களை பயிரிடுவது. இது போன்ற விவசாயத்தில் விடிய விடிய வேலைப் பார்த்து பின்னர் கணக்குப் பார்த்தால் கூலிகூட மிஞ்சாது என்பார்கள். அந்தளவுக்கு உழைத்து தேய்ந்து போன நிலமும்சரி, விவசாயிகளும்சரி நொந்து வெந்துபோய் கிடக்கின்றனர். வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. அப்படியே வந்தாலும் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தையே கூலியாக கொடுக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் பார்த்து வெறுத்துப்போன விவசாயிகளுக்கு மழையும் கை கொடுக்கவில்லை. வருண பகவான் கொடுக்கிற மழையில் விவசாயித்தை தொடர நினைக்கும் விவசாயிகளுக்கு வருணபகவான் கருணை காட்டாததால் நஷ்டத்தில்தான் முடிகிறது. விளைச்சல் நிலங்கள் தற்போது விலை நிலங்களாக மாறி பசுமையாக இருந்த காடுகள் பிளாட்டுகளாக மாறி வருகிறது. விவசாயத்திற்கு ஆட்களை இனி வேலை வாய்ப்பு முகாம்களில்தான் எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நிலைமை தலைகீழாக மாறி வரும் இந்த காலகட்டத்தில், 10க்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லாங்கிணர் பகுதி விவசாயிகள் துணிச்சலுடன் காய்ந்த பூமியில் பட்டு ரோஸ் செடிகளை வளர்த்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் சருகுகளாய் காட்சியளிக்கும் காடுகளில் பட்டுரோஸ் செடிகள் கண்களுக்கு விருந்தாய் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. ஐந்தாண்டுகள் வரை பலன் கொடுக்கும் பட்டு ரோஸ் செடிகள் விவசாயிகளுக்கு புத்துணர்வை ஏற்படுத்துகிறது. தினமும் லாபம் கிடைக்கும் தொழிலாக இருப்பதால் வீட்டில் உள்ளவர்களே ஆர்வத்துடன் பூக்களை பறித்து மார்க்கெட்டுக்கு அனுப்பிவிடுகின்றனர். குறைவான வேலை நிறைவான வருவாய் என விவசாயிக்கு மகிழ்ச்சி தருவதால் மற்றவர்களும் இதுபோன்ற விவசாயத்தை தொடர அரசு ஊக்குவிக்க வேண்டும்.

இது குறித்து மாரியப்பன்நாயக்கர் கூறியதாவது: பட்டுரோஸ் தண்டுகளை வாங்கி இயற்கை உரங்களை இட்டு நடவு செய்து வாரத்திற்கு 2 முறை தண்ணீர் விட்டால் போதும். 3 மாதங்களிலே பூ பூக்க துவங்கும். அவ்வப்போது பூச்சி தாக்காமல் இருக்க மருந்து தெளிக்க வேண்டும். நாட்டு ரோஸைவிட பட்டு ரோசுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் சீசனுக்கு ஏற்றவாறு நல்ல விலை கிடைக்கும். சாதாரணமாக ஒரு பூ ஒரு ரூபாய்க்கும், விஷேச நாட்களில் 10 ரூபாய்க்கும் விற்கும். ஆண்டுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு ஆகும். லாபம் மட்டுமே 40ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம்வரை கிடைக்கும். வேலைக்கு ஆட்கள் தேவையில்லை. நாங்களே தினமும் ஆயிரத்திலிருந்து 2 ஆயிரம் பூக்கள் வரை பறித்து மதுரை,விருதுநகர் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறோம். 5 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும் இந்த விவசாயத்தால் போதுமான வருவாய் கிடைப்பதால் மனநிறைவுடன் இருக்கிறோம் என்றார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் மணிவண்ணன் கூறியதாவது: சொட்டு நீர்ப்பாசனங்கள் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், 15 சதவீத உரமும் வழங்குகிறோம். தேவையான அறிவுரைகளை நேரிலே சென்று வழங்குவதற்கும் தயாராக இருக்கிறோம். அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி மானியத்தை பெற விவசாயிகள் முன்வரவேண்டும் என்றார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment